அன்னை மர்யம் ஆயிஷா (ரழி)

பிறப்பு
ஸய்யிதுனா ஷேய்கு நாயகம் தைக்கா ஷுஅய்பு ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு நாயகம் அவர்களின் தாயார் மர்யம் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா  அன்னையவர்கள் கீழக்கரையிலுள்ள ஸலாஹுத்தீன் மற்றும் அலீ ஃபாத்திமா நாச்சி என்ற தம்பதியினருக்கு இரண்டாவது பெண் குழந்தையாக ஹிஜ்ரி-1314 ஆவது வருடம் பிறந்தார்கள்​.
 

அன்னை மர்யம் ஆயிஷா உம்மா நாயகி ரழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களின் தந்தையார் அவர்கள், ஸய்யிதுனா இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் சகோதரி குணங்குடி ஃபாத்திமா உம்மா நாயகி அவர்களின் மகனாவார்கள். மேலும் ஸய்யிதுனா ஷாஹுல் ஹமீது ஜல்வத்து நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் துணைவியார் ஹதீஜா உம்மா நாயகி அவர்களின் உடன் பிறந்த சகோதரரும் ஆவார்கள்.

 
குத்துபுர் ரப்பானி ஸய்யிதுனா இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களால் மரியம் ஆயிஷா என்று பெயர் சூட்டப்பட்டார்கள்.
 
அன்னையவர்கள் குர்ஆன் முழுவதையும் மனனமிட்ட ஹாஃபிழா வாகவும், மார்க்க கல்வி பயின்ற ஆலிமா வாகவும் இருந்தார்கள்.  மேலும் அருமை நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது பேரன்பு கொண்ட ஆஷிகதுர் ரஸூல் ஆகவும் இருந்தார்கள். 
 
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீது மிக்க மரியாதை பேணுபவர்களாக இருந்தார்கள்.
மர்யம் ஆயிஷா உம்மா நாயகி (ரழியல்லாஹு தஆலா அன்ஹா) எந்த அளவிற்கு நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பற்று வைத்திருந்தார்கள் என்றால் அவர்களின் வரலாறை பார்க்கும் பொழுது நாம் அவற்றை காணலாம்.
 
நாயகி அவர்கள் மதீனா முனவ்வராவில் ஜியாரத்திற்கு சென்றால் தாஹா ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முன்பு எவ்வாறு நிற்பேன் என்று பயத்தின் (அதபின் உச்சம்) காரணமாக காய்ச்சல் வந்துவிடுமாம். கடைசியாக இருமுறை தனது கணவருடன் சென்றிருந்தபோது மிகவும் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது என்று நாயகியின் அதபு பற்றி கூறுகையில் மகான்கள் கூறுவார்கள்.
இளமைப் பிராயம்
அன்னையவர்கள் ஸுஃபியதான பெண்மணியாக விளங்கினார். மூன்று நாட்களில் ஒரு குர்ஆன் ஹதமை முடித்து விடுவார்கள். ஒரு மாதத்திலேயே பல ஹதம்களை முடிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
 
தன்னுடைய வாழ்நாளில் சுன்னத்தான தொழுகைகளை அதிகம் பேணித் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள். கீழக்கரையிலுள்ள பெண்களுக்கு உஸ்தாதா வாகவும், சிறந்த எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்தார்கள்.
 
தவறு செய்யும் பெண்களுக்கு அவர்களின் தவறுகளை உணர்த்தி திருத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். ஏழை, பணக்காரி என்ற பாகுபாடின்றி தவறு செய்தவர்களை கண்டிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். எனவே பெண்களுக்கு மத்தியில் அன்னையவர்கள் மீது மரியாதையுடன்​ கூடிய பயம் இருந்து வந்தது.
 
அன்னை மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களைப் போல ஹராமான விஷயங்களை விட்டு நீங்கியவர்களாகவும், அன்னை ஆயிஷா ஸித்தீகா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைப் போல் மார்க்க சட்டங்களை பெண்களுக்கு போதிப்பவர்களாகவும், தவறு செய்யும் பெண்களை கண்டிப்பவர்களாகவும் அவர்களுடைய “மர்யம்” “ஆயிஷா” என்ற பெயர்களுக்கு​ பாத்தியமானவர்களாகவே வாழ்ந்தார்கள்.
நாயகி அவர்கள் பொறுமையின் விஷயத்தில் பொறுமையின் சிகரமாக இருந்தார்கள்.
 
நாயகி அவர்களைப் பற்றி மகான்கள் கூறுகையில், வலிமார்களின் கூட்டத்தில் தலைசிறந்த குத்பான அல்-குத்புர் ரப்பானி வல் ஆலிமுஸ்ஸமதானி ஷெய்குல் இஸ்லாம் ஸய்யிதினா ஸய்யித் முஹம்மத் இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நாயகம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு நாயகி அவர்களின் வருங்கால குணநலன்களை காட்டிக் கொடுத்திருந்தான். 
 
அதன் காரணமாகவே எஜமான் அவர்கள் ஸய்யிதா மர்யம் ஆயிஷா உம்மா நாயகி(ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு மர்யம் ஆயிஷா என்ற பெயரை வைத்தார்கள்,  என்பதாக மகான்கள் கூறுவார்கள்
மணவாழ்வு
அன்னையவர்களின் 16 ஆவது வயதில் ஸய்யிதுனா ஜல்வத் நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனாகிய இமாமுல் அவ்ரஈன் என்ற துணைப் பெயரில் அறியப்பட்ட ஸய்யிதுனா ஷம்சுல் உலமா பெரிய ஷேய்கு நாயகம் தைக்கா அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார்கள்.
 

நமது ஷேய்கு நாயகம் தைக்கா ஷுஐபு ஆலிம் வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் தந்தை ஸய்யிதுனா பெரிய ஷேய்கு அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், ஷேய்கு நாயகம் அவர்களின் தாயார் அன்னை மர்யம் ஆயிஷா நாயகி ரழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களை திருமணம் செய்த காரணங்களில் ஒன்றாக இந்த சம்பவம் அமைந்துள்ளது என்று நமது ஷேய்கு நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறினார்கள்…

 
பெரிய ஷேய்கு நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்:
 
  • குத்புர் ரப்பானி வல் ஆலிமுஸ் ஸமதானி குத்புஸ் ஸமான் ஸய்யிது முஹம்மது இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் பேரப்பிள்ளை.
  • ஸய்யிதுனா ஹல்வத்து நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மாணவர் மற்றும் சகோதரரின் மகனும் ஆவார்கள்.
  • ஸய்யிதுனா ஜல்வத்து நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மகனார்.
  • நமது ஷேய்கு நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் தந்தையார்.
 
கீழக்கரை மக்கள் பலரும் தனது பிள்ளையை திருமணம் செய்து வைக்க முற்பட்ட போது, பெரிய ஷேய்கு நாயகம் அவர்கள்: “என்னிடம் பலர் வந்து கேட்டாலும் நான் மர்யம் ஆயிஷா அவர்களை திருமணம் செய்து கொள்ள விருப்பப் படுகிறேன்! எனக்கு மர்யம் ஆயிஷா அவர்களுடன் திருமணம் நடக்க வில்லை என்றால், நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்! நான் ஸுஹ்திற்கு சென்று விடுவேன்!” என்று கூறினார்கள்.
 
அதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்ட போது அவர்கள்: “மர்யம் ஆயிஷா அவர்கள் எல்லா விஷயங்களிலும் தகுதி பெற்ற பெண்மணி.  கல்வியில் ஆலிமாவாகவும், குர்ஆனில் ஹாஃபிழா வாகவும், தக்வாவில் சிறந்தவர்களாகவும், அல்லாஹு தஆலா உடைய அவ்லியாக்களில் விலாயத் பெற்ற பெண்ணாகவும், இக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல மஹான்களால் புகழப்பட்ட பெண்மணியாகவும் இருக்கிறார்கள்.  அவர்களை திருமணம் செய்து கொள்வது தான் எனக்கு திருப்தி கிடைக்கும்” என்று கூறினார்கள்.
 
அதே போல் அன்னை மர்யம் ஆயிஷா நாயகி ரழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களும்: “எனக்கு இத்தகைய நற்பேறு பெற்ற கணவரை இறைவனின் தந்ததற்காக அவனுக்கு நன்றி செலுத்துகிறேன்” என்று தனது கணவர் பெரிய ஷேய்கு நாயகம் அவர்களை பற்றி கூறிய தகவல்களை காணமுடியும். 
 
தன்னுடைய கணவரான பெரிய ஷேய்கு நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் முழு பொருத்தத்தையும், மன திருப்தியையும் அடைந்த மனைவியாகவும் விளங்கினார்கள்.
 
பெரிய ஷேய்கு நாயகம் அவர்களின் ஜீவிய காலத்திலேயே அன்னையவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள். அவர்களின் வஃபாத்திற்கு பின்னர் பல முறை அவர்களை நினைத்து பெரிய ஷேய்கு நாயகம் அவர்கள் கவலையில் ஆழ்த்தப்பட்டு, சமயங்களில் அழவும் செய்திருக்கிறார்கள் என்றால், பெரிய ஷேய்கு நாயகத்தின் உள்ளத்தில் இடம் பெறும் அளவிற்கு அவர்களுடன் வாழ்ந்துள்ளார்கள் என்பது சிந்திக்கத் தக்கதாகும்.
 
அன்னையவர்களுக்கும் பெரிய ஷேய்கு நாயகம் அவர்களுக்கும் மூன்று முத்தான பிள்ளைகள் பிறந்தார்கள்.
 
  1. முஸ்தஃபா ஆலிம் ஜமாலி அவர்கள்.
  2. ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்.
  3. அன்னை சித்தி ஆலியா அவர்கள்.
 
தன்னுடைய பிள்ளைகளுக்கு அல்லாஹ், ரஸுல் ஐப் பற்றியும், மார்க்க விஷயங்களைப் பற்றியும் முழுமையான முறையில் கற்றுக்கொடுத்தார்கள்.
மறைவு
அன்னையவர்கள் தன்னுடைய 63 ஆவது வயதில் ஹிஜ்ரி – 1378, ஜமாதுல் அவ்வல் பிறை – 2 வெள்ளிக்கிழமை லுஹா உடைய நேரத்தில் இறைவனடி சேர்ந்தார்கள். அவர்களுக்கு அவர்களின் கணவர் ஷேய்குனா பெரிய ஷேய்கு நாயகம் தைக்கா அஹ்மது அப்துல் காதிர் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தொழுகை நடத்தினார்கள். கீழக்கரையிலுள்ள மஸ்ஜிதுல் முஹ்தாரில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
கீழக்கரை மஸ்ஜிதே முக்தார் பள்ளிவாசலின் வெளியிலுள்ள கபரஸ்தானில் அங்கு ஷேய்கு நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜியாரத் செய்யும் போது எடுத்த புகைப்படம்
அவர்களின் புகழ்
மேலும், மஹான் பல்லாக்கு வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் திருவாயால் பல முறை “இவர்கள் சீதேவியான பெண்மணி” (விலாயத்துள்ள பெண்மணி) என்று அன்னையவர்கள் அருள்வாக்கு சொல்லப்பட்டிருக்கிறார்கள்.
 
அன்னையவர்களின் தந்தையும்: “என்னுடைய இரண்டாவது மகள் மர்யம் ஆயிஷா அவர்களைக் கொண்டு இறைவன் எனக்கு நிச்சயம் வெற்றியைத் தருவான் என நம்புகிறேன்” என்று அவர்களைப் பற்றி கூறியிருக்கிறார்கள். 
 
ஷெய்கு நாயகத்திடம் பல மகான்கள் ஷெய்கு நாயகத்தின் தாயாரை பற்றி கூறுகையில்,  “ஷுஐபே!  உம்முடைய தாயும், தந்தையும் பெரிய வலிமார்களில் சேர்ந்தவர்கள்.” என்பதாக கூறியுள்ளார்கள். 
 
மேலும் மர்யம் ஆயிஷா உம்மாவின் மகனும் அரூஸிய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் தலைவருமான ஷெய்கு நாயகம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் ஸய்யிதினா ஷெய்கு நாயகம் தைக்கா ஷுஐப் ஆலிம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது தாயாரை பற்றி சொல்லும்போது, கூறுவார்கள்:
 
“எனக்கு 2 வயது இருக்கும் போதே கண்மணி நாயகம் தாஹா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி எனக்கு என் அன்னை தான் கற்றுக் கொடுத்தார்கள்” என்று கூறுகிறார்கள்.
 
“அதே போல் தஹஜ்ஜது தொழ அன்னையவர்கள் எழுந்திருக்கும்போது எனக்கும் அது வழமையாவதற்காக 3 வயதிலேயே என்னையும் எழுப்புவார்கள்” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
 
“நான் இந்த அளவிற்கு கல்வியில் பிரசித்தி பெறுவதற்கு காரணம் என் தாயாரின் துஆ தான்” என்பதாக கூறுவார்கள்.
 
அந்த அளவிற்கு அல்லாஹ், ரஸுலு க்கு செய்ய வேண்டிய கடமையானாலும், தாய் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையானாலும், கணவருக்கு செய்ய வேண்டிய கடமையானாலும், பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமையானாலும், சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமையானாலும் ஒவ்வொன்றையும் சரிவர செவ்வென செய்து முடித்துள்ளார்கள்.
 
அதனால் தான் அல்லாஹ், ரஸுல் இன் பொருத்தத்தையும், தாய் தந்தையரின் பொருத்தத்தையும், கணவரின் பொருத்தத்தையும், பிள்ளைகளின் பொருத்தத்தையும், சமூகத்தின் பொருத்தத்தையும் அடைந்துள்ளார்கள் அன்னையவர்கள்.

♦  ♦  ♦

ஷெய்கு நாயகம் தைக்கா ஷுஐபு ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் தாயார் ஸய்யிதத்துனா மர்யம் ஆயிஷா நாயகியின் (ரழியல்லாஹு தஆலா அன்ஹா) மீது அவர்களின் பேரப்பிள்ளை மௌலவி அல்-ஹாஃபிழ் தைக்கா முஹம்மது ஸதகத் ஜலாலி ஆலிம்‌ கௌஸி அவர்களால் கோர்வை செய்யப்பட்ட பைத் (இங்கு கிளிக் செய்யவும்).

மேற்கண்ட பைத்தின் ஆடியோ.

மேற்கண்ட பைத்தின் வீடியோ.

♦  ♦  ♦

இன்னும் பல அனுபவப்பூர்வமான நிகழ்வுகள்….
 
கட்டுரையின் நீளம் கருதி சுருக்கப்பட்டிருக்கிறது…
 
நமது ஷேய்கு நாயகம் தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களின் தாயாராகிய அன்னை மர்யம் ஆயிஷா ரழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களின் பொருட்டால் நம்மனைவரின் பாவங்களையும் அல்லாஹு தஆலா மன்னித்தருள்வானாக…
 
அவர்களின் பொருட்டால் சிறந்த மார்க்கப்பற்று மிக்க சீதேவிகளாக நமது பெண் சமுதாயத்தையும் அல்லாஹு தஆலா ஆக்கி அருள்புரிவானாக…
 
ஆமீன்!!
 
ஸய்யிதா மர்யம் ஆயிஷா உம்மா நாயகி (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் பொருட்டாலும் அவர்களின் கணவரான ஷம்ஸுல் உலமா ஸய்யிதினா பெரிய ஷெய்கு நாயகம் தைக்கா அஹ்மத் அப்துல் காதிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் பொருட்டாலும் அன்னார் இருவர்களின் மகனாகிய குத்பு ஸய்யிதினா ஷெய்கு நாயகம் தைக்கா ஷுஐப் ஆலிம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் பொருட்டாலும் இவர்களின் முன்னோர்களான குத்புமார்களான அவ்லியாக்களின் பொருட்டாலும் ஈருலகிலும் வெற்றி பெற்ற ஸாலிஹீன்களான நல்லடியார்களின் கூட்டத்தில் நம் அனைவரையும் சேர்த்தருள்வானாக! ஆமீன்!!
 
இவர்களின் பரக்கத்தால் நம்முடைய அனைத்து நல்ல காரியங்களையும் அல்லாஹ் நிறைவேற்றியருள்வானாக.
 
ஆமீன்!!
 
சுவனத்தில் பிரவேசிக்கும் நற்பாக்கியத்தை, எல்லாம் வல்ல அல்லாஹு ஜல்ல ஷஃனுஹு தஆலா நமக்கும், நம் குடும்பத்தார்களுக்கும், நம் உஸ்தாதுமார்களுக்கும், இக்கட்டுரையை எழுத கட்டளையிட்டவர்களுக்கும், எழுதியவர்களுக்கும், அதற்கு உதவியவர்களுக்கும், உலக வாழ் முஸ்லிம்கள் முஃமின்கள் அனைவருக்கும் தந்தருள்புரிவானாக…
 

وَبِحَمْدِكَ يَا قَيُّومُ اخْتِمْ .. بِالْخَيْرِ لَنَا كُلًّا وَّأَتِمْ

 
نَعْمَاكَ عَلَيْنَا ثُمَّ أَدِمْ لُقْيَاكَ بِفِرْدَوْسِ الرَّغَدٖ {٣}
 
صَلَوَاتُ اللّٰهِ عَلَى الْمَهْدِي .. اَلْهَادِى الْخَلْقِ إِلَى الرُّشُدِ
 
صَلَوَاتُ اللّٰهِ بِكُلِّ فَمٍ … تَغْشَى الْهَادِى خَيْرَ الْأُمَمِ
 
صَلَّى اللّٰهُ عَلَى مُحَمَّدْ .. صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمْ {٢}
 
صَلَّى اللّٰهُ عَلَى مُحَمَّدْ .. يَا رَبِّ صَلِّ عَلَيْهِ وَسَلِّمْ
 
 سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ
 
وَسَلٰمٌ عَلَى الْمُرْسَلِيْنَ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ